Thursday 25 April 2013

மே தினம் vs இஸ்லாம்




فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ (8)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَتْ عَامَّةُ وَصِيَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ حَضَرَتْهُ الْوَفَاةُ،
وَهُوَ يُغَرْغِرُ بِنَفْسِهِ «الصَّلَاةَ، وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ»

                இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கம் இதில் அலசப்படாத அம்சங்களே இல்லை எனலாம். இறைவனைப் பற்றி யோசிக்கின்ற மார்க்கங்கள் மனிதனைப் பொருட்படுத்துவதில்லை. மனிதனை யோசிக்கின்ற இஸங்கள் இறைவனைப் பொருட்படுத்துவதில்லை. மனிதன், இறைவன் இரண்டையும் முறையாக வைத்துப் பார்க்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
                அந்த வகையில், தொழிலாளர் நலன்கள் குறித்த இஸ்லாமியப் பார்வை என்ன? என்பது குறித்தான சில தகவல்களைப் பார்ப்போம்.
                தொழிலாளர் வர்க்கப் போராட்டம் மிக நீண்ட வரலாற்றை உடையது. 8 மணி நேர வேலைகளை போராடி உயிர்த்தியாகம் செய்த அந்த தியாகிகளை கேலி செய்யும் விதமாக, வெற்றுக் கோஷ உரிமைகளாக இன்று மே தின போராட்டத்தை மாற்றிப் போட்டு விட்டார்கள்.
                இப்பொழுது மே தினம் வெறுமனே ஊர்வலங்களாகவும், கண்டனக் கூட்டங்களாகவும், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு விழாவாகவும் மாறிப் போய்விட்டது. மே தினத்தை ஊர்வலமாகக் கொண்டாடுவதின் மூலம் மட்டும் தொழிலாளர் வர்க்கத்தின் நியாயமான உரிமைகளை அடைந்துவிட முடியும் என்பது சத்தியமற்ற ஒன்று.
                உழைப்பாளிகளின் உரிமைகளை உலகிற்கு உரிய முறையில் உரைத்தது இஸ்லாம் தான் என்று அவர்கள் தெரிந்து கொள்வார்களே யானால் மெய்மறந்து விடுவார்கள்.

கூலி உத்திரவாதம்:
                இன்றைய உலகில் சில முதலாளிகள், தொழிலாளர்களிடம் குறிப்பிட்ட கூலி பேசிவிட்டு வேலை முடிந்த பின் குறைத்துக் கூலி தருவதையும், அதிகப்படியான வேலை வாங்கிவிட்டு குறைவான கூலி கொடுப்பதையும், சிலர் கூஸீயே கொடுக்காமல் உழைப்பாளிகளை கொத்தடிமைகளாக வைத்து கொத்துப் பரோட்டாவைப்போல குத்திக் குதறுவதையும் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
                ஃபாரினுக்கு உன்னை அனுப்புகிறேன், பக்காவான வேலை வாங்கித் தருகிறேன், பத்தாயிரம் சம்பளம் கிடைக்கும் என பந்தாவாய் அழைத்துக் கொண்டு போய் பாஷை தெரியா தேசத்தில் பாஸ்போர்ட்டை யும் பறித்துக் கொண்டு பாலைவனத்திலேயே ஒட்டகத்தோடு ஒரு ஒட்டகமாய் மனித வாழ்வை பாழ்பண்ணச் செய்யும் போலி புரோக்கர்கள் நிறைந்த உலகமிது.
                இதுமாதிரியான அக்கிரமங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. எந்த ஒரு சின்ன வேலையானாலும் கூலி பேசப்பட்டு விட்டால் அதில் குறைவு செய்திட எவருக்கும் அனுமதி இல்லை.
                கூலி வழங்குவதை முதலாளிமார் தொழிலார்களுக்குச் செய்யும் உபகாரம் என்று சொல்லவில்லை. அதை உழைப்பாளியின் உரிமை என பிரகடனப்படுத்துகிறது இஸ்லாம்.
                இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்து கொண்டிருந்தவர் களுக்கு முடிவில்லாத நற்கூலி இருக்கின்றது (புஸ்ஸிலத்:12) என இறைவன் இயம்புகிறான். இது மறுமைக்கு மட்டுமான செய்தியல்ல. இம்மையில் புரியப்படும் உடல் உழைப்புக்கும் சேர்த்துத்தான் என்பதை நாம் விளங்கியாக வேண்டும்.
                கூலி வழங்குவதால் முதலாளி மதிப்பிற்குரியவனுமல்ல. கூலி பெறுவதால் தொழிலாளி கேவலத்திற்குரியவனுமல்ல. ஏனவே, என்னிடம் கைநீட்டி சம்பளம் வாங்குபவன் தானே என்று ஒரு முதலாளி தன் தொழிலாளியை இளக்காரமாய் எண்ணக் கூடாது. அவ்வாறெண்ணுவது அறியாமைக் காலச் செயல் என்கிறது இஸ்லாம்.
                தொழிலாளியே கூலி வாங்க மறந்திட்டாலும் அதைப் பத்திரப்படுத்தி பாதுகாத்து வைத்து உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும். அது ஒரு அமானிதம். பனூ இஸ்வேலர் காலத்தில் குகையில் மாட்டிக் கொண்ட மூவரில் ஒருவர், தன்னிடம் வேலை செய்த கூலிக்காரனின் கூலியைப் பத்திரப்படுத்தி, அதற்கொரு ஆடு வாங்கி, அது ஆட்டு மந்தையாகி அவன் எதேச்சையாக திரும்பி வந்து கேட்ட போது, ஒப்படைத்த வரலாறும், அந்த நற்செயலால் ஆபத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டதும் நாம் அறிந்த ஒன்றே.
                சில நேரங்களில் விலை மதிப்புள்ள பொருட்களை அவசர நிமித்தம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஒரு மனிதன் உள்ளாக வேண்டியது வரும். அது மாதிரியான கட்டங்களில், வந்தது வரை சுருட்டுவோம் என்ற பாணியில் அவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்கி தன் அலமாரியில் வைத்து அழகு பார்க்கச் சொல்லவில்லை இஸ்லாம். அவனது சூழ்நிலை கருதி உரிய விலையையே வழங்கச் சொல்கிறது.
                இதுபோல, ஒரு தொழிலாளி நிர்ப்பந்த நிலையில் குறைந்த கூலிக்கு பணி செய்ய வருகிறபோது, ரொம்ப நல்லதாப் போச்சு என்று நினைத்து கூலியைக் குறைத்து விடக்கூடாது. அவனது நிர்ப்பந்த நிலை புரிந்து சற்று நிரப்பமாகவே அவனது திறமைக்கேற்ப கூலி வழங்கப்பணிக்கிறது.
                உங்களில் ஆணாயினும் பெண்ணாயினும் எவருடைய நற்செயலுக் குண்டான கூலியையும் நான் வீணாக்கமாட்டேன். (ஆல இம்ரான் 198) என இறைவன் உத்திவாதமளிக்கிறான். இது மறுமைக்கான கூலி மட்டுமல்ல, உலக ரீதியான உழைப்புக்குரிய கூலிக்குமான உத்திரவாதமும் கூட.                        
َ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ، قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُه
தொழிலாளியின் வியர்வை உலறும் முன் அவனது கூலியை வழங்கிவிடுமாறு பணிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள். (இப்னுமாஜா) தினக்கூலி என்றால் பகலின் முடிவிலும், வாரக்கூலி என்றால் வாரத்தின் இறுதியில், மாதக்கூலி என்றால் மாதக் கடைசியில் சம்பளம் வழங்கப்பட்டாக வேண்டும். அதில் தாமதம் செய்யக்கூடாது.
                "வாக்களித்துவிட்டு மாறு செய்பவன், சுதந்திரமனிதனை அடிமைச் சந்தையில் விற்கு அதன் கிரயத்தை உண்டவன், வேலைக்கு ஒருவனை அமர்த்தி, குறிப்பிட்ட கூலியையும் பேசி, வேலையையும் வாங்கிவிட்டு பேசிய கூலியை "ஸ்வாஹா" செய்தவன் ஆக இம்மூன்று கிரிமினல் களுக்கெதிராக நின்று நாளை மறுமையில் நான் இறை நீதிமன்றத்தில் வழக்காடுவேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் (புகாரி)
                அநீதி இழைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவாகவும், உரிய கூலியை வழங்க மறுத்த முதலாளி வர்க்கத்திற்கு எதிராகவும் நபி (ஸல்) அவர்கள் நிற்பார்கள் என்பதிலிருந்து தொழிலாளர் நலத்தில் இஸ்லாம் கொண்டுள்ள அதிகப்படியான அக்கறையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

சக்திக்கேற்ற வேலை :
                வேலைக்கமர்த்திவிட்டோம், இனி அவன் நமது சொல்படியே நடக்க வேண்டும் என்ற ரீதியில் அதிக வேலை கொடுத்து தொழிலாளியை சக்கையாய் பிழிந்தெடுக்கக் கூடாது.
                ஆல்லாஹ் எந்த மனிதரையும் அவனது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. (அல்பகரா:256) (தொழுகை, நோன்பு, ஹஜ், இன்னபிற) வணக்க வழிபாடுகளில் கூட சக்திக்கு மீறிய அளவில் உங்களை நான் சிரமப்படுத்த மாட்டேன் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறபோது, தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கும் கொடுமையை எங்ஙனம் அவன் சகித்துக் கொள்வான்?
                உலகம் முழுவதும் எட்டு மணி நேர வேலை என உறுதி செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டி அலுவலகத்தில் ஒரு தொழிலாளியை அமர வைத்து அலைக்கழிக்கக் கூடாது. அவனுக்கென்று குடும்பம் உள்ளது. அன்றாட அலுவல்கள் காத்திருக்கின்றன. அவற்றை அவன் ஆற்றுவதற்கு எந்த வகையிலும் இடையூறு தரக்கூடாது.
                பணி நேரத்தைத் தாண்டி வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கான ஓ.டி. சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். காரணம், "தொழிலாளிகளை நீங்கள் சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம். அதிகப் படியான சிரமம் என்றால் அதில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்" என்பது நபிமொழி.
                பளுவான சுமையை தூக்க முடியாமல் தொழிலாளி சிரமப்படுகிற போது பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காதீர்கள். நீங்களும் சேர்ந்து அவனுக்கு உதவி செய்யுங்கள் என்பதும் நபிமொழியே.

தேவைக்கேற்ற கூலி :
                வேலைக்குத் தகுந்த கூலியை வழங்குகின்ற தனிப்பட்ட முதலாளிகள் தனது தொழிலாளிகளின் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்து கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டாயப்படுத்தா விட்டாலும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கூலி அவர்களது நியாயமான தேவைகளை நிறைவு செய்யாத பட்சத்தில் முறையான ஆய்வுக்குப் பின் அரசு அவர்களது தேவைகளை சரிசெய்து கொடுக்க பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
                தனி மனிதனுக்கு ஒரு மடங்கு கூலியும், குடும்பஸ்தனுக்கு இரு மடங்கு கூலியும் தரப்பட வேண்டும் என்று புகாரியிலும், அரசாங்க வேலையில் அமர்த்தப்பட்ட ஒருவனுக்கு வீடில்லாத போது வீடும், வாகன வசதியில்லாத பட்சத்தில் வாகனமும், திருமண ஏற்பாடும் செய்யப்பட வேண்டும் என்று அபூதாவூதிலும் ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்க அம்சமாகும்.

இடைவேளை ஓய்வு :
                ஓடிக் கொண்டேயிருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஓய்வு அவசியம். ஒருவன் தொடர்ந்து ஒரு வேலையில் ஈடுபடுகிற போது ஒருவிதமான சோர்வுக்கும், விரக்திக்கும் உள்ளாகிறான்.
                ஓய்வே கொடுக்காமல் தொழிலாளர்களைத் தொடர்ந்து வேலைக்குட்படுத்தி அதனால் அவர்கள் மனநிலை பாதிப்புக்குள்ளாகி முறையாக பணியில் ஈடுபடாததால் மேலநாட்டுக் கம்பெனி ஒன்று நஷ்டத்தில் மூழ்கிப் போனதாக ஒரு செய்தி உண்டு.
                சுதாரண பொழுதுபோக்கு அம்சமான மூன்று மணிநேர சினிமாவுக்கே இன்டர்வெல் தேவைப்படுகிறபோது, உழைப்பினிடையே ஓய்வென்பது உறுதியான விஷயம்.
                இதைக் கருத்தில் கொண்டு தான் நபி (ஸல்) அவர்கள் இடையிடையே உங்கள் உடல்களுக்கு ஓய்வு கொடுப்பதின் மூலம் உங்களது உள்ளங்களை சங்கோஜப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று நவின்றுள்ளார்கள்.
                இதுபோன்ற எதார்த்தங்களை மனதில் கொண்டு, உடல் ஓய்வுக்காக, உழைக்க சக்தி வழங்கிய வல்லவன் அல்லாஹ்வைத் தொழுதிட உழைப்பாளிகளுக்கு பணியினூடே நேரம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.
                முஸ்லிம் அல்லாத ஒரு முதலாளி தன் கீழ் பணி செய்யும் வேலைக்காரனுக்கு தொழுகவும், நோன்பிருக்கவும் உளமார உரிமை வழங்குவதும், ஒரு இஸ்லாமிய முதலாளி அவ்வாறான சலுகைகளை வழங்காதிருப்பதும் முரண்பாடான விஷயம். இதை சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்க வேண்டும்.
                ஒரு தொழிலாளி இயலாமை, நோய், முதமையில் சிக்கி சிரமப் படுகிறபோது சலுகையும், மெடிக்கல் லீவும், அதற்கான செலவும் பென்ஷனும் வழங்கப்பட வேண்டும்.
                "ஒருவன் விட்டுச் செல்கிற பொருள் அவனது வாரிசுகளைச் சேரும்.  சொத்து எதுவுமின்றி, சந்ததிகளும் உழைக்க முடியாத பலவீனர் களாய் இருந்தால், அவர்களை என்னிடம் கொண்டு வாருங்கள். அவர்களுக்கு நான் பொறுப்புதாரி" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் ஒரு குறிப்பு உண்டு.

தொழிலாளர் கடமைகள் :
                இவ்வாறு கூலிக்கான உத்திரவாதம், தேவைக்குத் தகுந்த கூலி, சக்திக்குட்பட்ட வேலை, வேலை நேர ஓய்வு என உழைப்பாளிகளுக்கு உறுதுணையாக பேசுவதை வைத்து ஒரேயடியாக இஸ்லாம் உழைப்பாளி களின் பக்கம் சாய்ந்துவிட்டதாக தப்புக் கணக்குப் போட்டுவிடக் கூடாது.
                "நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள், உங்களது பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஒரு முதலாளி, தொழிலாளி யின் பொறுப்பாளர். ஏனவே அது குறித்து அவர் விசாரணைக்குட் படுத்தப்படுவார் என்று சொல்கிற அதே இஸ்லாம் தான்,
                ஒரு தொழிலாளி முதலாளியின் பொருள் விஷயத்தில் பொறுப்பாளி யாவார். எனவே அதுபற்றி அவர் பதில் சொல்லியாக வேண்டும் என "பேலன்ஸ்" செய்கிறது.
                "தனக்கு வழங்கப்பட்ட வேலையை ஒழுங்குபடச் செய்யும் உழைப்பாளனே இறைவனுக்கு உகப்பானவன் (பைஹகீ) என ஒரு நபிமொழி கூறுகிறது.                                                                                                     
        عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «المَمْلُوكُ الَّذِي يُحْسِنُ عِبَادَةَ رَبِّهِ، وَيُؤَدِّي إِلَى سَيِّدِهِ الَّذِي لَهُ عَلَيْهِ مِنَ الحَقِّ، وَالنَّصِيحَةِ وَالطَّاعَةِ لَهُ أَجْرَانِ»
   மூல முதலாளியான இறைவன்,இடையில் வந்த மனித முதலாளி இவருக்குமான கடமைகளை பேணி நடந்த தொழிலாளிக்கு இருமடங்கு கூலி உண்டு (புகாரி, முஸ்லிம்) எனவும் இன்னொரு நபிமொழி இயம்புகிறது.
                ஆனால், இன்றைய எதார்த்த உலகில் அரசுப் பணியாளர்களான, ஆசிரியர் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு வருவதில்லை வந்தாலும் உருப்படியாக வேலை செய்வது இல்லை. அரட்டையிலும், அரைத் தூக்கத்திலுமாக தங்களது பணி நேரங்களை பாழாக்குகின்றனர்.
                வார விடுமுறை, கோடை விடுமுறை, தலைவர்களின் இறந்த, பிறந்த நாள் விடுமுறை, விசேஷ நாட்கள் விடுமுறை என வருடத்தில் பகுதி நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்தாலும் போலியான மெடிக்கல் சான்றுகளைக் காண்பித்து அதிகப்படியான லீவு எடுத்து அரசாங்கத் திற்கு நஷ்டம் விளைவிக்கின்றனர்.
                இதல்லாமல் எடுத்ததற்கெல்லாம் ஸ்டிரைக், உண்ணாவிரதம் என வேலை நிறுத்தக் கூத்துக்கள் வேறு. ஆதனால் சாதாரண கோழி முட்டை தொடங்கி, உயிர் காக்கும் மருந்துகள் வரை எதுவுமே உரிய இடத்திற்குப் போகாமல் தொழில் முடங்கிப் போவதோடு, விலைவாசியும் உயர்ந்து போய்விடுகிறது.
                எங்கள் தேவை நிறைவேறுகிறவரை மக்கள் தேவை பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்ற போக்கை இன்றைய தொழிலாளர் கள் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். இது மாதிரியான போக்கை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. நீங்கள் எந்தச் செய்லைச் செய்து கொண்டிருந்தாலும் அதை நீங்கள் செய்து கொண்டிருக்கும் போது நாம் உங்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம் (10:16) என்று இறைவன் கூறுகிறான்.
                எனவே, இது மாதிரியான போக்கினைக் கைவிட்டுவிட்டு, உரிமைகளுக்காகப் போராடும் அதே வேளையில் தங்களது கடமைகளை யும் தொழிலாளிகள் மறந்தவிடக் கூடாது, அதுவே அர்த்தமுள்ள மே தினமாக அமைய முடியும்.

No comments:

Post a Comment